கடலூர், ஆகஸ்ட் 18:
கடலூர் மாவட்டம், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “கற்றல் கொண்டாட்டம்” திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கூடுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி வகுப்பினை இன்று (18.08.2026) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கலந்து கொண்டு ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆங்கில மொழியில் தன்னம்பிக்கையுடன் பேசும் திறனை வளர்த்துக் கொள்வதற்கும், அவர்களின் தகவல் தொடர்புத் திறன் மற்றும் எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும் இப்பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“கற்றல் கொண்டாட்டம்” திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனுடன், தனித்திறன், தகவல் தொடர்புத் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.
இப்பயிற்சியை மாணவ, மாணவிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கில மொழியில் சரளமாகவும், தன்னம்பிக்கையுடனும் பேசும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.