பேராவூரணி, ஆக.18

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெரியகத்திக்கோட்டை கிராமத்தில் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரனார் சுவாமி மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் உள்ளூரில் பிறந்து, வெளியூருக்கு திருமணமாகி வாக்கப்பட்டுச் சென்ற பெண்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு, கும்மியடித்து, குலவை சத்தமிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து மதியம் பேராவூரணி மற்றும் முடப்புள்ளிக்காடு, நீலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குதிரை எடுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு வானவேடிக்கைகள் மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பெரியகத்திக்கோட்டையில் பிறந்து திருமணமாகி வெளியூர்களில் வசித்து வரும் பெண்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து ஒன்றிணைந்து கும்மியடித்து, குலவை சத்தமிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். மேலும் பாரம்பரிய முறையில் பெட்டைக் கோழிகளை நேர்த்திக்கடனாக செலுத்தி, உப்பு சேர்க்காமல் சமையல் செய்து படையலிட்டு சுவாமியை வழிபட்டனர்.

உள்ளூரில் பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களும் வெண்பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர். அதிகாலை நேரத்தில் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து நள்ளிரவில் ஊமத்தநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், விளங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் கிடா விருந்து நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

வரும் புதன்கிழமை மூன்றாம் நாள் விழாவாக ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாவிளக்கு போடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய வழிபாட்டு முறைகளுடன் நடைபெற்ற இவ்விழா, வெளியூர்களில் திருமணமாகி வசித்து வரும் பெண்கள் தங்களது பிறந்த ஊருக்குத் திரும்பி, குடும்பத்தினருடன் இணைந்து வழிபடும் பாசத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

-பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *