காரைக்கால் புதுநகரை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் என்பவரது மகன் முஹம்மது கைஃப் (23). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 27ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அதிகாலை 05.30 மணியளவில் தனது நண்பரான காரைக்கால் மீராப்பள்ளி தோட்டத்தை சேர்ந்த அஜ்மல் அஹமது (23) என்பவரது மோட்டார் சைக்கிளில் காரைக்கால் திருநள்ளார் ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளை முஹம்மது கைஃப் ஓட்ட, நண்பர் அஜ்மல் அஹமது பின்னால் அமர்ந்திருந்தார்.

அவர்கள் காரைக்கால் காத்தாப்பிள்ளைக்கோடி சிக்னல் அருகே சென்றபோது பாரதியார் ரோட்டில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வேகமாக வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்தனர். இதில் தலையில் பலத்த அடிபட்ட முஹம்மது கைஃப் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரான அஜ்மல் அஹமதுக்கு இடது தோள்பட்டை, இடது கால், இடுப்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆம்னி பஸ் ஒட்டுநரான வேதாரண்யம் புஷ்பவனத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் அய்யப்பன் (37) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால் – 9385856800

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *