தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், ஆக- 22. தஞ்சாவூர்திலகர் திடலில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் 15-ஆவது தமிழ் மக்கள் இசை விழா முதல் நிகழ்வாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் முன்னாள் தலைவர் அ.முகுந்தன் இசை விழா கொடியினை ஏற்றி வைத்தார். ஓவிய கண்காட்சியை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் லோகநாதன் திறந்து வைத்தார்.

மக இக சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எழில் மாறன் தலைமையில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை மாநில கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெ.மாரப்பன் இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் நடைபெற்ற கருத்தரங்கத் திற்கு மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செங்கொடி தலைமையில் நடைபெற்றது. கீழடி நாகரீகத்தை மறைப்பதன் மூலம் தேசிய இனங்களின் உணர்வுகளை சிதைக்கும் ஒன்றிய அரசு என்ற தலைப்பில் தமிழக மக்கள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பொழிலன், பெரியார் பார்வையில் அழுகி நாறும் வேத நாகரீகம் என்ற தலைப்பில் புதிய குரல் நிறுவனர் மற்றும் திரைப்பட நடிகை ஓவியா, இந்திய வரலாறு தெற்கு திசை தான் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் களப்பிரன், கீழடி நாகரிக உண்மையும் மார்க்சிய வரலாற்று வழிகாட்டலும் என்ற தலைப்பில் வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி ஆகியோர் உரையாற்றினார்கள்.

மாலையில் கீழடி அகழ்வாய்வு உண்மையும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையும் என்ற தலைப்பில் கீழடி அகழாய்வு அறிஞர், உ.பி கிரேட்டர் நொய்டா இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்புரையாற்றினார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தமிழ்நாடு புதுச்சேரி பொதுச் செயலாளர் கோவன் தலைமையில் நடைபெறும் கலையரங் கத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் செழியன், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில தலைவர் பழனி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள அதிகாரம் மாநில தலைமைக் குழு உறுப்பினர் ராஜு, திரைப்பட இயக்குனர் ராஜுமுருகன் ஆகியோர் மக்கள் கலை இலக்கிய இசை விழாவை வாழ்த்தி பேசினார்கள்.

நிகழ்வில் ரெட்டிப் பாளையம் ரங்கராஜன் குழுவினர் தப்பாட்டக் குழு, புதுவை பூபாலன் கலைக்குழு, ராப் சாங் காம்ரேட் கேங்ஸ்டார் குழு, தெலுங்கானா அருணோதயா கலைக்குழு, கிருஷ்ணகிரி பையனப்பள்ளி தெருக்கூத்து லட்சுமி நாராயணசாமி நாடக சபா, சிறுநகர் இசைச் சமர் பறை இசைக்குழு, பேராசிரியர் காளீஸ்வரன் இன் மாற்று ஊடக மைய கலை நிகழ்ச்சி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெற்றது.

இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றி வருகின்ற அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள நாகரிகத்தை ஆய்வு செய்வதற்கு எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் கீழடியில் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய திராவிட தமிழர் நாகரிகத்தை நிலை நாட்டுகிறது என்பதை நிரூபித்துள்ளது. இந்த வகையில் திராவிட தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்த அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் அரிய பணியை இந்த தமிழ் மக்கள் இசை விழா பாராட்டுகிறது. அவருக்கு ஏற்படும் தடைகளை உடைப்பதற்கு மக்கள் கலை இலக்கிய கழகம் உறுதியுடன் செயல்படும் என்றும் அறிவிக்கின்றது.


உலகின் முக்கியமான நாகரிகங்களில் ஒன்றாக மாறியுள்ள 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முன்னேறிய திராவிட தமிழர் வாழ்வியல் முறைகள் கீழடி அகழ்வாய்வு மூலம் நிறுவப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தி அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் வெளியிட்டுள்ள 982 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை எந்தவிதமான திருத்தங்களோ அல்லது சேர்க்கை களோ இல்லாமல் உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ் மக்கள் இசை விழா இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்து கிறது.


வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் புராண புளுகு மூட்டைகளையும், இதிகாசங்களையும், வேதங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆர்எஸ்எஸ் பாஜக நிறுவ முயற்சிக்கின்ற சரஸ்வதி வேத நாகரிகத்தை உயர்த்திப் பிடிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு இசைவாக தற்போது கீழடி அகழ்வாய்வறிக்கையை திருத்தித் தருமாறு நிர்பந்திக்கின்ற இந்திய தொல்லியல் துறையின் அராஜக போக்குகளையும், அதிகாரத்துவத்தையும் இந்த தமிழ் மக்கள் இசை விழா வன்மையாக கண்டிக்கிறது. வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுத வேண்டும் என்று அறிவிக்கின்றது.


தற்போது கீழடியில் நிறுவப் பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வு பணிகள் ஆகியவற்றை எவ்விதவிதமான தடையும் இன்றி மேற்கொண்டு செல்வதற்கும் உரிய நிதியை ஒதுக்கி திராவிட தமிழர் நாகரிகத்தின் அடையாளத்தை உலகறிய செய்ய வேண்டிய பொறுப்பு தற்போது தமிழகத்தை ஆண்டு வருகின்ற தமிழக வெற்றி கழகத்திற்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதை அவ்வாறு தவறுகின்ற பட்சத்தில் அதற்கு எதிராக கடுமையாக போராடுவோம் என்பதையும் தமிழ் மக்கள் இசை விழா அறிவிக்கின்றது.

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று தந்தை பெரியார் முன்வைத்த அடிப்படையில் பகுத்தறிவும், சுயமரியாதையும் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக போராடுவதும், அதே காலத்தில் தமிழ் சமூகத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கின்ற பொருளாதார கொள்கைகள்; சமூக நீதிக்கு எதிரான பார்ப்பனிய நச்சுக் கருத்துக்கள், மக்களின் மீது திணிக்கப்படுகின்ற பார்ப்பன பாசிச அடக்குமுறைகள் ஆகியவை அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று தமிழ் சமூகத்திற்கு தமிழ் மக்கள் இசை விழா அறைகூவல் விடுக்கின்றது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, முடிவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் ராவணன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *