நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு சங்க கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் தங்களது துண்டுகளை விரித்து பொதுமக்களிடம் யாசகம் கேட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கூட்டுறவு சங்க கடன்களை தள்ளுபடி செய்யாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். முடிவில் திட்டச்சேரி கிளை தலைவர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.