கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் மற்றும் பிற சிக்கலான நோய்களுக்கு, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் உதவியுடன் உயர்தர சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், பொள்ளாச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன், அரிய வகை ரத்தப் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டான். பெற்றோருக்கு ஒரே மகனான அந்தச் சிறுவனின் தந்தை ஒரு பிளம்பர். மாதம் 10,000 ரூபாய் மட்டுமே வருமானம் பெறும் அவரால், மகனின் உயிரைக் காப்பாற்றத் தேவையான லட்சக்கணக்கான ரூபாய் மருத்துவச் செலவை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், கடுமையான காய்ச்சல் மற்றும் மயக்க நிலையில் அந்தச் சிறுவன் ஜி. கே. என். எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனையில் அவனுக்கு மிகவும் ஆபத்தான ‘ஏ.பி.எம்.எல்’ (ஆர்சனிக் மற்றும் ‘ஆல்-டிரான்ஸ் ரெட்டினோயிக் ஆசிட்) எனப்படும் வாய்வழி வைட்டமின் ஏ மூலம் இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சை), எனப்படும் அரிய வகை ரத்தப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது.
நோயின் தீவிரத்தால் சிறுவனின் மூளையில் பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அவனுக்கு வலிப்பு மற்றும் கை, கால்கள் செயல்படாத நிலை ஏற்பட்டது. சிறுவனின் மூளையில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, மருத்துவர்கள் அவசரமாக ஒரு அறுவை சிகிச்சை செய்து, அவனது மண்டையோட்டின் ஒரு பகுதியை அகற்றி, அதைப் பாதுகாப்பாக அவனது வயிற்றுப் பகுதிக்குள்ளேயே வைத்தனர்.
பின்னர், புற்றுநோயைக் குணப்படுத்த நவீன மருந்துகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் இடையே ரத்தத்தில் கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டாலும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால் சிறுவன் மெல்ல மெல்ல அபாய கட்டத்தைத் தாண்டினான். தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவமனையிலேயே தங்கி புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சைகளைச் சிறுவன் பெற்று வந்தான்.
சிறுவன் முழுமையாகத் தேறிய பிறகு, முன்பு அகற்றி வயிற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மண்டையோடு மீண்டும் மூளைப் பகுதியிலேயே வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. தற்போது அந்த 3 வயது சிறுவன் புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து, இயல்பாகப் பேசவும் நடக்கவும் தொடங்கியுள்ளான்.
இந்த ‘ஏ.பி.எம்.எல்” வகை ரத்தப் புற்றுநோய் குழந்தைகளைத் தாக்குவது மிகவும் அரிது. நோயின் தொடக்கக் கட்டத்தில் உடலில் தீவிர ரத்தக் கசிவை ஏற்படுத்துவது இதன் ஆபத்தான தன்மையாகும். ஆனால், ஆரம்பத்திலேயே துல்லியமான சிகிச்சை அளித்துவிட்டால் 95 சதவீதம் இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்திவிட முடியும்.
ஒரு சாதாரண பிளம்பர் வேலை செய்யும் தந்தைக்கு, இவ்வளவு பெரிய மற்றும் நீண்டகால சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பது சாத்தியமே இல்லை. இந்தச் சவாலான நேரத்தில், சிறுவனின் சிகிச்சை செலவு முழுமைக்கும் ‘லிண்டே அறக்கட்டளை’ பெரும் நிதியுதவி வழங்கி ஆதரவளித்தது. இதனால் அந்தச் சிறுவனுக்குத் தடையின்றி சிகிச்சை கிடைத்து, இன்று ஒரு புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளான்.
இது குறித்துச் சிறுவனுக்குச் சிகிச்சை அளித்த ஜி. கே. என். எம் மருத்துவமனையின் குழந்தை பருவ ரத்தப் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் எல். அஜிதா கூறுகையில், “மிகச் சிறிய வயதில், மிகவும் ஆபத்தான ரத்தப் புற்றுநோயுடன், மூளையில் ரத்தக்கசிவு போன்ற அடுத்தடுத்த பெரும் சிக்கல்களுடன் வந்த இந்தச் சிறுவனைக் காப்பாற்றுவது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களின் கூட்டு முயற்சியாலும், சரியான நேரத்திலான அறுவை சிகிச்சைகளாலும் சிறுவன் உயிர் பிழைத்துள்ளான். இவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சரியான நேரத்தில் உதவிய லிண்டே அறக்கட்டளைக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்,” என்றார்.
லிண்டே இந்தியா நிறுவனத்தின் தலைவர் திரு. மைக்கேல் டிவைன் பேசுகையில்: “சமூக மேம்பாடு என்பது லிண்டே நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும்; அது எங்களின் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியும்கூட. உண்மையான முன்னேற்றம் என்பது வெறும் வணிக வெற்றியை மட்டும் குறிப்பதல்ல் ஒட்டுமொத்த சமூகத்தில் நாங்கள் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தில்தான் அது அளவிடப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மூலம், நாங்கள் எங்கள் பொறுப்பைச் செயலாக மாற்றி, வலிமையான, ஆரோக்கியமான மற்றும் மீள்திறன் கொண்ட சமூகங்களை உருவாக்க உதவுகிறோம்,” என்று கூறினார்.