திருவாரூர்., செப்.15-

அரசுப் பணிக்காக சென்றபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் திரண்டு மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே பில்லூர் பகுதியைச் சேர்ந்த சுமதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அலுவலகக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமதி தனது இருசக்கர வாகனத்தில், தன்னுடன் பணியாற்றிய லட்சுமி என்பவருடன் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் சென்ற லட்சுமி படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசுப் பணிக்காக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த சுமதியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர், மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் ஆகியோரிடம் மனு அளித்து, உயிரிழந்த சுமதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத்த வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

மனு அளித்த பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒன்று திரண்டு, விபத்தில் உயிரிழந்த சுமதிக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் ஏராளமான பணியாளர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ பிரியா கூறுகையில், குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்த சுமதி, அரசுப் பணிக்காக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஆனால், அவருக்கு இதுவரை ஈமச்சடங்கு நிதி கூட வழங்கப்படவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 14 பணியாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களில் யாருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வு, காப்பீடு மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சுமதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். உரிய இழப்பீடு வழங்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *