நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஏனநல்லூர் கிராமத்தில் மண்டகுளத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்து கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழா கடந்த 15-ம் தேதி அனுக்ஞை, கணபதி ஹோமம் பூர்வாங்க பூஜைகள், தீர்த்தம் எடுத்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து யாக காலை பூஜைகள், மகா பூர்ணாஹதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித கடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரங்களை அடைந்து 9.45 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் கோட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருளாளிகள் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.