நாகப்பட்டினம்,செப்.19-
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் திருமருகல் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணன் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் (பொ) அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரன் வரவேற்றார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரவீன் கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். கூட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம் 1986 இன் படி குழந்தை தொழிலாளர்கள் இல்லாத ஒன்றியமாக மாற்றிட வேண்டும், குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்திட வேண்டும், குழந்தை திருமணங்கள் நடைபெறாத ஒன்றியமாக மாற்ற வேண்டும், இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்திட வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரவணகுமார, சுகாதார ஆய்வாளர் விவேகானந்தன், திட்டச்சேரி காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.