பிளஸ்-ஒன் மாணவர் இறப்பு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 50 பேர் வலுக்கட்டாயமாக கைது செய்யப் பட்டனர்.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியை சேர்ந்த பிளஸ் – ஒன்மாணவர் தமிழ்ச்செல்வன் (வயது 16). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர். ஒரு கண்மாயில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவரின் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்செல்வனின் உடலை வாங்கமறுத்து குடும்பத்தினர், உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்ச்செல்வன் இறப்பு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தர விட வேண்டும், இதில் தொடர்புடையவர் களை கைது செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நுழைவு வாயில் கதவை மூடி அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கதவில் ஏறி கலெக்டர் அலுவலகத்திற்குள் குதித்தனர். பின்னர் அவர்கள் கட்டட வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும், போலீசாரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவி யாளர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலெக்டர் நேரில் வரவேண்டும் என்று கூறினர்.
அதை தொடர்ந்து போலீஸ் துணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்ததால் கைது செய்ய முயன்றனர்.
ஒரு கட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர். பெண்களை தரதரவென்று இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும். போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கைது செய்தவர்களை அழைத்து செல்லும் போது மாணவர் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை வேறு வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகமும் பரபரப்பாக காணப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *