மன்னார்குடி,. செப்.20-

“‘வந்தே மாதரம்’ என்பதன் பொருள் ‘நான் எனது தாயை வணங்குகிறேன்’ என்பதுதான். இதில் எங்கே மதம் இருக்கிறது?” என திரைப்பட நடிகர் ரஞ்சித் கேள்வி எழுப்பினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று மாலை சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாமணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

முன்னதாக ராஜகோபாலசுவாமி திருக்கோயில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் ரஞ்சித் பங்கேற்று ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:…“இந்தியா ஆன்மீகத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய தேசமாக உலக அரங்கில் நிற்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக வரவில்லை. உணர்வோடு பங்கேற்றிருக்கிறோம்.

இந்திய சுதந்திரத்துக்காக ஏராளமானோர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்தின் காரணமாகவே இன்று நாம் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறோம்.

1893-ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் விநாயகர் சிலையை பொதுவெளிக்கு கொண்டு வந்தார். ஆங்கிலேய ஆட்சியின்போது மக்களை சாதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக பிரித்திருந்த நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தில் விநாயகர் வழிபாடு பொதுவெளியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த தேசத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

‘வந்தே மாதரம்’ என்றால் ‘நான் எனது தாயை வணங்குகிறேன்’ என்பதாகும். இதில் எங்கே மதம் இருக்கிறது? மதமே இல்லாத ஒரு அர்த்தமுள்ள நாடு இந்தியா மட்டுமே” என்றார்.

இதைத்தொடர்ந்து மன்னார்குடி, அசேஷம், பைங்காநாடு, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

கோபாலசமுத்திரம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, மேலராஜ வீதி, கீழராஜ வீதி வழியாக சென்ற ஊர்வலம் பாமணி ஆற்றை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

ஊர்வலத்தைக் காண வழியெங்கும் பொதுமக்களும் பக்தர்களும் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சியை சிறுவர், சிறுமியர்களும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *