கோயம்புத்தூர், 01 அக்டோபர் 2026:
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நோயை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், மார்பகப் புற்றுநோய் மற்றும் மார்பக நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “தி பிங்க் பாதை” என்ற விழிப்புணர்வு தொகுப்பு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்டது.
இந்த விழிப்புணர்வு தொகுப்பை கோவை மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ்., தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிகழ்வில், அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“தி பிங்க் பாதை” மூலம் மார்பகப் புற்றுநோய் குறித்த பல்வேறு தகவல்கள் பொதுமக்களுக்கு எளிய முறையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் பி. குகன் கூறுகையில்,
இளம் பெண்களிடையே மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், பெண்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும்.
மேலும் அவர் கூறுகையில், 2024-ம் ஆண்டு குளோபோகான் தரவுகளின்படி இந்தியாவில் சுமார் 1.92 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் சுமார் 30 சதவீதம் மார்பக புற்றுநோயாக உள்ளது. முன்பு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் அதிகமாக காணப்பட்ட இந்த நோய், தற்போது இளம் வயதினரிடையேயும் அதிகளவில் கண்டறியப்படுகிறது.
25 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் 6.5 சதவீதமும், 30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் 14.1 சதவீதமும் பாதிப்பு காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 35–39, 40–44 மற்றும் 45–49 வயதினர்களிடமும் பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கிறது. முன்பு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் அதிகமாகக் காணப்பட்ட மார்பக புற்றுநோய், தற்போது இளம் வயதினரிடையேயும் கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 50 வயதுக்கு குறைவானவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘தி பிங்க் பாதை’ முன்னெடுக்கப்படுகிறது. இதில் மார்பக புற்றுநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், ஆபத்து காரணிகள், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், நோயறிதல் பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், நமக்கு பாதிப்பு உள்ளதா என்பதை அறிதல் மற்றும் புற்றுநோயை வென்றவர்களின் அனுபவங்கள் என 9 முக்கிய தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்தி ஆரம்பநிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற இந்த தி பிங்க் பாதை உதவும்.
புற்றுநோயை முழுமையாகத் தடுக்க முடியாத சூழ்நிலைகள் இருந்தாலும், அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் இதிலிருந்து மீண்டு வர முடியும். குறிப்பாக 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
‘தி பிங்க் பாதை’ என்பது ஒரு அழகான நிறத்தை மட்டும் குறிக்கவில்லை. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் புதிய பாதையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அக்டோபர் மாதம் முழுவதும் 0422-4500 000 மற்றும் 0422-4389 797 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்படும். என்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.
QR கோடு ஸ்கேன் செய்து விழிப்புணர்வு அடங்கிய தகவல்கள் பெறலாம்.