திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை ஊக்குவிக்கும் ‘வெற்றி பயணம்’ திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக ‘வெற்றி பயணம்’ திட்டத்தை மாநில அளவில் தொடங்கி வைத்தார். மேலும் இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், IAS, கொடியசைத்து பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை தொடங்கி வைத்தார்.
மேலும்‘வெற்றி பயணம்’ திட்டத்தின் மூலம் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்களது அன்றாட தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் பயணம் மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக, பேருந்து பயணத்திற்காக பெண்கள் செலவிடும் தொகை குறைவதன் மூலம் குடும்பங்களின் அன்றாட பொருளாதாரச் சுமை குறையவும், பெண்களின் சுயசார்பு மற்றும் சமூகப் பங்கேற்பை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் அதிக அளவில் அரசுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை எளிதில் அணுகுவதற்கான சூழல் உருவாகும்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பேருந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், பயணிகளிடம் திட்டம் குறித்த கருத்துகளையும் கேட்டறிந்தார்.