கும்பகோணத்தில் அன்னை சட்டக் கல்லூரி தொடக்கம்-திறமையும் பண்பும் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே சட்டக்கல்லூரியின் நோக்கம்
உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜேஷ் விவேகானந்தன் பேச்சு
கும்பகோணத்தில் அன்னை கல்விக் குழுமத்தின் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அன்னை சட்டக் கல்லூரியின் தொடக்க விழா நடைபெற்றது.அன்னை சட்டக் கல்லூரி முதல்வர் சங்கிலிகண்ணன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் துணைத்
தலைவர் டாக்டர் ஏ. யஹ்யா நயீம் வரவேற்றார். கல்லூரி தலைவர் அன்வர் கபீர் முன்னிலை வகித்தார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜேஷ் விவேகானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் பெயர் கல்வெட்டை திறந்து வைத்து, கல்லூரி செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கேற்றி விழாவில் பேசியதாவது:-
சட்டக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் வெறும் பட்டம் பெறுபவர்களாக இல்லாமல், திறமை, பண்பு மற்றும் சமூக அக்கறை கொண்டவர்களாக உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.
இன்றைய சூழலில் பல கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்த்துக் கொள்ளும் நிலை உள்ளது. ஆனால், இந்த சட்டக்கல்லூரியில் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்து சேர்க்கும் நடைமுறை பின்பற்றப்படுவது பாராட்டுக்குரியது. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்து, பல கட்டங்களாக நேர்காணல் நடத்தி சேர்க்கும் முறையை நிர்வாகம் கடைப்பிடிக்கிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மாணவர்கள் திறமையானவர்களாக மட்டுமல்லாமல், நல்ல பண்புகளையும் சமூக நலனில் அக்கறையையும் கொண்டவர்களாக உருவாக வேண்டும்.
இன்றைய இளம் வழக்கறிஞர்கள் சட்ட வழக்குகளை திறமையாக நடத்துவதற்கான பயிற்சிகளைப் பெறுகின்றனர்.சட்ட ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால், படிப்பை முடித்தவுடன் வழக்குகளை நடத்தும் திறன் அவர்களுக்கு கிடைக்கிறது.
அதே நேரத்தில், நீதிமன்றத்தில் எவ்வாறு அமர வேண்டும், நீதிபதியிடம் எவ்வாறு பேச வேண்டும், மற்றொரு வழக்கறிஞர் வாதிடும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் பண்புகளையும் கற்றுக்கொள்வது அவசியம். இத்தகைய பண்புகளை கல்வி நிறுவனங்களிலேயே உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அந்த வகையில், கல்வியுடன் பண்பையும் இணைத்து மாணவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று நீதியரசர் கூறினார்.
முன்னதாக மரக்கன்றுகள் நடுதல், கல்லூரி இணையதளம் வெளியிடுதல் மற்றும் என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அன்னை கல்விக் குழும நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.