சென்னை: முதல்வர் விஜய்க்கு வீடியோ வெளியிட்டு விட்டு சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், முதல்வர் விஜய் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் ஆட்டோ டிரைவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இப்ராஹிம். ஆட்டோ டிரைவர். வியாசர்பாடி எம்கேபி நகர், சர்மா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு செல்போனில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில், “இந்த பதிவு எதற்கு போடுகிறேன் என்றால், என்னை மாதிரி வேறு யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. இதை சக ஓட்டுநர்கள் பார்க்கும் போது நான் உயிரோடு இருப்பேனா என்று எனக்கு தெரியாது. இந்த பதிவினை நம்ம முதல்வருக்கும், போக்குவரத்து ஆணையருக்கும் பதிவினை சமர்ப்பிக்கிறேன். என் வண்டியை என்னால் பராமரிக்க முடியவில்லை. தனியாக இருந்தும் என்னால், இன்சூரன்ஸ், எஃப்சி, தேய்மானம்.. இதுக்குமேல கடன்.. என்னால சமாளிக்க முடியலை.

சிஎம் விஜய் சார்.. நீங்க இந்த வீடியோவை பார்க்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன். நீங்க இத மட்டும் செஞ்சு கொடுங்க.. ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும். என்னை போன்ற ஏழை ஆட்டோ ஓட்டுநர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். பைக் டாக்ஸி சேவைகளால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர கோரிக்கை வைத்து ஆட்டோ டிரைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இப்ராஹிம் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *