தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், அக்- 5. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெறும். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
அப்போது அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் நிறுவனத் தலைவர் பொன்.முருகேசன் தலைமையில் நரிக்குறவர் இன மக்கள் காசி.ரவிச்சந்திரன் மற்றும் ராஜேந்திரன், ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் மனுவில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பட்டித்தோப்பு பசுபதி கோவில் பகுதியில் ஏராளமான நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் ஊசி, பாசி, சிக்குமுடி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது உறவினர்கள் பல ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதிகளில் சுற்றி வியாபாரம் செய்து வருகின்றனர் .
இந்த நிலையில் கடந்த 20-8-26 அன்று அதிகாலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர், வெங்கனூர் போலீசார் சிலர் எங்கள் தெருவிற்குள் நுழைந்து கார்த்தி, ராமராஜ், விஜயன், சரத்குமார் ஆகிய நான்கு பேரை அழைத்து சென்று அவர்கள் மீது திருமானூர், வெங்கனூர், கீழப்பழுவூர் காவல் நிலையங்களில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களை தாக்கியுள்ளனர்.
காவல்துறையின் இந்த சட்ட விரோத செயல் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் சமூக மக்கள் 4 பேர் போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறையால் சட்ட விரோதமாக பறித்து செல்லப்பட்ட பணம், கைபேசிகளை மீட்டு கொடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.