அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் நிலவும் நிர்வாக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் வே.கனியமுதன் பங்கேற்று பேசினார்.

அப்போது, அரூர் அரசு மருத்துவமனையில் போதிய எண்ணிக்கையில் டாக்டர்கள் இருந்தும், காலை மற்றும் இரவு நேரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான டாக்டர்களே பணிக்கு வருவதாகவும், அனைத்து டாக்டர்களும் முழுமையாக பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் தலைமை மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ராஜேஷ் கண்ணாவை இடமாற்றம் செய்ய வேண்டும். சிறிய காய்ச்சலுக்குக்கூட நோயாளிகளை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனை வசதிகளுக்கு தேவையான டாக்டர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அரூர் நகரில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, மயானப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தகுதியானவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். மூடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில், கேசவன், மூவேந்தன், ஞானசுடர், சரண்யா, துரைவளவன், கம்பை குமார், ரகுநாத், சாக்கம்மாள், மகாராணி, பாஷா, தாதை வேடியப்பன், விடுதலை வேலன், இருமத்தூர் முருகன், பொய்கை சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநில, மண்டல பொறுப்பாளர்கள் வடிவேலன் முருகன், தென்னவன் சூர்யா, தென்னரசு, காதர் பாட்ஷா, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும், மாவட்ட நிர்வாகிகள் சாக்ரடீஸ், ஆதிலட்சுமி, ராஜாராம், ராமன், கண்ணதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *