தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், அக்- 7. தஞ்சாவூர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு இடது மூட்டில் வளைவு ஏற்பட்டு மூட்டு அசாதாரணமாகப் பின்னோக்கி வளைந்திருந்ததை மீனாட்சி மருத்துவமனை வெற்றிகரமாக சரிசெய்து குணமாக்கியிருக்கிறது.
சுமார் ஐந்து ஆண்டுகளாக இரண்டு முழங்கால் மூட்டுகளிலும் வலியாலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்த இந்த முதியவருக்கு (குறிப்பாக இடது கால் மூட்டில் பாதிப்பு அதிகம்) சீரமைப்பு அறுவைசிகிச்சை நடந்த மறுநாளே, இயன்முறை சிகிச்சை உதவியுடன் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட காலில் உடல் எடையைத் தாங்கி நிற்க முடிந்தது. அவர் படிப்படியாக மூட்டுகளில் இயக்கத் திறனைத் திரும்பப் பெற்று, ஒரு மாதத்திற்குள் இயல்பாக நடக்கத் தொடங்கினார்.
எலும்பியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் கார்த்திகேயன் மகாராஜன், இணை ஆலோசகர்கள் டாக்டர் சண்முக ஹரிஹரன் மற்றும் டாக்டர் பாலகுருநாதன், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அரி மாணிக்கம் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் இணைந்து, எலும்பியல் துறையின் துறைத் தலைவரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் கே. பார்த்திபன் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். பல சிக்கலான படிநிலைகளைக் கொண்ட இந்த அறுவைசிகிச்சை சுமார் இரண்டரை மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
டாக்டர் பார்த்திபன் கூறுகையில், நோயாளியின் வயது, கடுமையான எலும்புத் தேய்மானம், கணிசமான மூட்டுக் குறைபாடு மற்றும் எலும்பு சேதம் ஆகியவற்றின் காரணமாக இது ஒரு சவாலான செயல்முறையாக இருந்தது. காயம் ஏற்பட்டவுடன் தகுந்த நேரத்தில் மருத்துவ உதவியை நாட வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். இந்த முதியவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இடது கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. அதற்கு தகுந்த சிகிச்சை பெறாததால், பல ஆண்டுகளாக மூட்டின் நிலை படிப்படியாக மோசமடைந்து, இறுதியில் கடுமையான குறைபாட்டிற்கும் நடமாட்டம் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி.பிரவீன் உடனிருந்தார்.