திருவண்ணாமலை, நவ.15:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நெகிழி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திருவண்ணாமலை அஷ்டலிங்க கிரிவலப் பாதையில் மாபெரும் நெகிழி தூய்மைப் பணி நடைபெற்றது. இதனை திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழுத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
பல்வேறு தொண்டு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், அருணை பொறியியல் கல்லூரி, இதயா மகளிர் கல்லூரி, எஸ்.கே.பி. கல்லூரி, ஸ்ரீதனலட்சுமி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கிரிவலப் பாதையில் உள்ள நெகிழிக் கழிவுகளைச் சேகரித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற மாணவர்களுக்கு கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் கழிவுகளைச் சேகரிக்கும் பைகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாகப் பணியாற்றிய 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இளைய தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
“நெகிழியைத் தவிர்ப்போம்! இயற்கையைக் காப்போம்! தூய்மையான திருவண்ணாமலையை உருவாக்குவோம்!” என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.