கால்நடை மருத்துவச் சேவைகளை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கை – அமைச்சர் தகவல்
கரூர்: மாவட்ட ஆட்சித் தலைவர் ச. பிரசன்னா ராமசாமி, இ.ஆ.ப., தலைமையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் செ. கமலி, கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடை மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்துதல், கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கால்நடைகளின் நலனைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கரூர் மாவட்டம் கொளந்தானூர் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் அமைந்துள்ள கால்நடை பெரு மருத்துவமனையில், கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வேலாயுதம்பாளையம், மண்மங்கலம், வாங்கல் மற்றும் எஸ். வெள்ளாளப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டு, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் பயன்பாடு, தடுப்பூசி செலுத்தும் பணிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மருத்துவச் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பெரியகாளிபாளையத்தில் புதிய கால்நடை மருந்தகக் கட்டடம் கட்டும் பணி மற்றும் ஆத்தூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செ. கமலி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் மருத்துவச் சேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 17 கோழிப் பண்ணைகளில் இருந்த கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பண்ணைப் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
கால்நடை மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தெருநாய்கள் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை (ABC) திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் புதிதாக 38 மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 72 புதிய விலங்குகள் தங்குமிடங்கள் (Shelters) அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அவசரகால கால்நடை மருத்துவச் சேவைக்காக ஏற்கனவே 245 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கூடுதலாக 143 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளன.
மேலும், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள சுமார் 2,000 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, கரூர் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சத்யா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் இ. கார்த்திகேயன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் வி. விஜயகுமார், கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.