தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலையம் அருகே காரின் மீது மோதி நிற்காமல் சென்ற லாரியைப் பின்தொடர்ந்து சென்றபோது, சங்கம்பாளையம் பிரிவு அருகே சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி லாரி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

தாராபுரம் வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்த மூர்த்தி (40) என்பவர், கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் இருந்து தனது குடும்பத்தினருடன் காரில் தாராபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டடம் காவல் நிலையம் அருகே உள்ள வேகத்தடையில் சென்றபோது, பல்லடத்தில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற லாரி, மூர்த்தியின் காரின் பின்பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து லாரி நிற்காமல் சென்றதால், காரை ஓட்டி வந்த மூர்த்தி லாரியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது சங்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் மோதி நிலைதடுமாறி தலைகுப்புறக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த கருப்புசாமியின் மகன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (54) படுகாயமடைந்தார். விசாரணையில், உடுமலை–பொள்ளாச்சி சாலையில் இயங்கி வரும்ஜாய் கார்த்தி இண்டஸ்ட்ரீஸ்
தனியார் கயிறு ஆலையில் இருந்து சணல் கயிறுகளை ஏற்றிக்கொண்டு, பல்லடம் வழியாக தென்காசியில் உள்ள கயிறு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் சென்று லாரிக்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் முத்துப்பாண்டியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமையிலான போலீசார், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், திடீரென லாரி சாலையில் கவிழ்ந்ததால் கோவை–தாராபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் எஸ். எஸ். பாலசுப்பிரமணியன். ராமகிருஷ்ணன். நிலவன். போலீசாரும், குண்டடம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தைச் சீரமைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *