கோவை: நடிகர் தனுஷ், மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
இதனை முன்னிட்டு, கோவை தெற்கு மாவட்ட தனுஷ் நற்பணி இயக்க மகளிரணி இணைச் செயலாளர் ராஜேஸ்வரி சார்பில், ஆதரவற்றோர் காப்பகங்களில் வசிக்கும் 50 பெண் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக கோவை கவுண்டம்பாளையம் மற்றும் போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து தலா 25 பேர் வீதம் மொத்தம் 50 சிறுமிகள், காப்பக நிர்வாகிகளுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்பட்டு, கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கற்பகம் திரையரங்கில் மாலை காட்சியாக ‘ஓம்’ திரைப்படம் திரையிடப்பட்டது.
முன்னதாக, திரையரங்க வளாகத்தில் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய ராஜேஸ்வரி, குழந்தைகளுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஸ்வரி, தான் தொடர்ந்து ஆதரவற்றோர் காப்பகங்களுக்குச் சென்று தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதாகவும், கடந்த தீபாவளி பண்டிகையின்போது குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கச் சென்றிருந்தபோது, சில குழந்தைகள் நடிகர் தனுஷின் திரைப்படத்தை முதல் நாள் திரையரங்கில் பார்க்க வேண்டும் என தங்களது ஆசையைத் தெரிவித்ததாகவும் கூறினார்.
குழந்தைகளின் அந்த ஆசையை நிறைவேற்றும் வகையிலேயே இன்றைய திரைப்படக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அவர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை காட்சிக்குச் செல்லாமல், தற்போது குழந்தைகளுடன் மாலை காட்சியைப் பார்க்க வந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதனிடையே, தங்களது காப்பகத் தோழிகளுடன் இணைந்து பெரிய நடிகர்களின் திரைப்படத்தை வெளியான முதல் நாளிலேயே திரையரங்கில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாகவும், தற்போது அந்த ஆசை நிறைவேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் குழந்தைகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
ஆதரவற்ற குழந்தைகளின் சிறிய ஆசையை உணர்ந்து, அவர்களுக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த ராஜேஸ்வரியின் இந்த மனிதநேய முயற்சி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.