அரசு மருத்துவமனைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கடலூர், நவ.21:

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 6,642 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததன்படி, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் 28.09.2026 அன்று தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தாய்மையையும், குழந்தை பிறப்பின் மகத்துவத்தையும் போற்றும் வகையிலும், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு மருத்துவமனைகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் தமிழக அரசால் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், 22.06.2026 முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாலின வேறுபாடின்றி ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் 27.09.2026 வரை பிரசவமான 4,145 தாய்மார்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 28.09.2026 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளிலேயே தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 28.09.2026 முதல் 19.11.2026 வரை பிரசவமான 2,592 தாய்மார்களில், இதுவரை 2,497 தாய்மார்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 95 பயனாளிகளுக்கும் தங்க மோதிரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 6,642 குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

பயனாளிகள் மகிழ்ச்சி

பயனாளி ஆனந்தி கூறியதாவது:

நான் விருத்தாசலம் வட்டம், பூவனூர் பகுதியில் வசித்து வருகிறேன். கருவுற்ற நாள் முதல் குழந்தை பிறக்கும் வரை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தேன். 01.08.2026 அன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, 02.10.2026 அன்று எனது குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

அரசின் இத்திட்டத்தின் மூலம் எனது குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களைப் போன்ற ஏழை, எளிய குடும்பங்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பயனாளி தேவிகா கூறியதாவது:

நான் விருத்தாசலம் வட்டம், மங்களம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன். 29.07.2026 அன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, 01.10.2026 அன்று எனது குழந்தைக்கு அரசின் சார்பில் தாய்மாமன் சீர்வரிசையாக தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

அரசின் இத்திட்டத்தின் மூலம் எனது குழந்தைக்கு தங்க மோதிரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *