கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பெத்தேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் கணேசன் அறிவுரையின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஹேமலதா தலைமை தாங்கினார்.
இதில் கூவத்தூர் தமிழன்னை கலைக்குழுவின் நிறுவுநர் அகநம்பி தி. பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கையுறை பொம்மைகள் மற்றும் கம்பி பொம்மைகள் மூலம் குழந்தைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தினார்.
பொம்மலாட்டத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு எளிய முறையில் கல்வியின் அவசியம், கற்றலின் சிறப்பு மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.