மதுரை: மதுரை தெற்கு வாசல் நாடார் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாநகர் கிளையின் 15-வது அமைப்புத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை முருகன் மற்றும் இராமச்சந்திரன் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக இருந்து நடத்தினர்.

இத்தேர்தலில் வட்டாரத் தலைவராக செல்வகுமார், வட்டாரச் செயலாளராக சுப்புலட்சுமி, வட்டாரப் பொருளாளராக காந்திபாய் சுவாமியடியாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், வட்டாரத் துணைத் தலைவர்களாக வனிதா, பரமசிவம், சசிகலா ஆகியோரும், வட்டாரத் துணைச் செயலாளர்களாக சுமதி, சாந்தினி, டேனியல் துரைப்பாண்டியன் ஆகியோரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வாழ்த்திப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், “ஆசிரியர்களின் கோரிக்கைகள் எனது அறை முழுவதும் நிரம்பி வழிகிறது. அவற்றுக்குத் தீர்வு காண குழு ஒன்று அமைக்கப்படும்” என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆனால், குழு அமைப்பது என்பது பிரச்சினைகளைத் தீர்க்காமல் கிடப்பில் போடும் செயலாகவே கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.

கடந்த இரண்டு ஊதியக் குழுக்களிலும் மிகக் கடுமையான ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஜனவரி மாதம் முதல் வருடாந்திர ஊதிய உயர்வைக்கூட பெற முடியாமல் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊதிய அட்டவணையில் வரிசை எண் 45-ல் அடிப்படை ஊதியம் ரூ.75,900-ஐ எட்டியுள்ள இடைநிலை ஆசிரியர்களும் வருடாந்திர ஊதிய உயர்வு பெறும் வகையில், ஊதிய அட்டவணையின் நிலை 10-ல் வரிசை எண் 50 வரை நீட்டித்து உடனடியாக அரசாணை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். காலை உணவு தயாரிக்கும் பணியாளர்களை நிரந்தரப் பணியிடங்களில் காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.

அதேவேளையில், காலை உணவுத் திட்டப் பணிகளை மேற்பார்வையிட ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாகப் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது தொழிலாளர் நலச் சட்டங்களின் அடிப்படை நோக்கங்களுக்கு முரணானது. மேலும், மேற்பார்வைப் பொறுப்புகள் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியையும் வெகுவாகப் பாதிக்கின்றன. எனவே, காலை உணவுத் திட்ட மேற்பார்வைப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை மறுபரிசீலனை செய்து, அதனைக் கைவிட கல்வித்துறை முன்வர வேண்டும்.

இவ்வாறு மாவட்டச் செயலாளர் சீனிவாசன் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *