நிலத்தடி நீரைப் பாதுகாக்க மாநகராட்சி நடவடிக்கை – பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் வேண்டுகோள்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் அளவு குறைந்துள்ள நிலையில், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கும் நோக்கில் மாநகரப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முழுமையாகச் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி உதவிப் பொறியாளர் (திட்டம்) நாகராஜன் தலைமையில், மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பெரிசன் பிளாசா வணிக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, விழிப்புணர்வு நோட்டீஸ் வணிக வளாக நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வணிக வளாகத்தின் உரிமையாளரும் மாநகராட்சி மேயருமான ஜெகன், தனது வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு வசதிகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நேரில் காண்பித்தார். மேலும், மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, மழைநீர் செல்லும் குழாய்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் என அடையாளப்படுத்தி எழுத வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதற்கு மேயர் ஜெகன், உடனடியாக அந்தக் குழாய்களில் மழைநீர் சேகரிப்பு குழாய் என எழுத நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மாநகரப் பகுதியில் நல்ல மழை பெய்து வந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மழை வெள்ளத்தையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும், இன்று வரை மாநகர மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்திலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கவும் மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியமாகும். இதன் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளனவா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

எனது சொந்தமான பெரிசன் பிளாசா வணிக வளாகம் கடந்த 2017-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அன்றிலிருந்து மழைநீர் கழிவுநீர் கால்வாயில் கலக்காமல் தனியாகத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அந்தத் தொட்டியில் சேகரிக்கப்படும் மழைநீரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும், நான் மேயராகப் பொறுப்பேற்ற பிறகு மாநகரப் பகுதியில் புதிதாக எட்டு குளங்கள் உருவாக்கப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவை சி.வ. குளம், முள்ளிக்குளம், மாடன்குளம், சங்கரப்பேரி குளம், புலி பாஞ்சான் குளம், கோக்கூர் குளம், அம்பேத்கர் நகரில் ஸ்டெம் பார்க் அருகிலுள்ள குளம் மற்றும் தெப்பக்குளம் ஆகியவையாகும்.

இந்தக் குளங்களில் மழைநீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்க முடியும். நமது மாநகரப் பகுதி கடலோரப் பகுதியாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்புநீராக மாறும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு எந்தவிதமான குடிநீர் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆகையால், மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வணிக வளாக உரிமையாளர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்து, அவற்றை முறையாகப் பராமரித்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஸ்லின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், திமுக நிர்வாகிகள் பிரபாகர், ஜேஸ்பார் மற்றும் மாநகராட்சியில் அனுமதி பெற்ற பொறியாளர்கள் லட்சுமணன், சண்முகநாதன், மாரிக்கண்ணன், கிருபாகரன், சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *