பந்தநல்லூர் அருகே பரபரப்பு – குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே காமாட்சிபுரத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் ஆலயமணியின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் மீது மர்ம நபர்கள் மாட்டுச்சாணத்தை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்க மாநிலத் தலைவராக இருப்பவர் ஆலயமணி. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான காமாட்சிபுரம் கடைவீதியில் வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அந்தப் பேனர் மீது மாட்டுச்சாணத்தை வீசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பா.ம.க. வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காமாட்சிபுரம் கடைவீதியில் அணைக்கரை – பந்தநல்லூர் சாலையில் வாகனங்களை குறுக்கே நிறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

காமாட்சிபுரம் பகுதியில் பா.ம.க. சார்பில் வைக்கப்படும் விளம்பரப் பேனர்களை தொடர்ந்து சேதப்படுத்துவதுடன், திட்டமிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், பேனர் மீது மாட்டுச்சாணம் வீசிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காமாட்சிபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *