கோவையில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) கோவை மண்டலம் சார்பில், 10-வது தேசிய உயர்கல்வி மாநாடு 2026 மெர்லிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

தொழில்துறை 5.0-க்கான உயர்கல்வி மறுவடிவமைப்பு

‘சைபர்-பிசிக்கல், அறிவார்ந்த மற்றும் தன்னாட்சி அமைப்புகள்: தொழில்துறை 5.0-க்கான உயர்கல்வியின் மறுவடிவமைப்பு’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாநாட்டை, சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பராக் கல்கர் துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், தொழில்துறை 5.0 வளர்ச்சியில் மனித ஆற்றல், நெறிமுறைகள், நிலைத்தன்மை மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பல்துறை கல்வி, செய்முறைப் பயிற்சி, திறன் அடிப்படையிலான மதிப்பீடு மற்றும் புதுமையான ஆராய்ச்சிகளை கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

மாநாட்டின் கருப்பொருள் உரையை, ஆர்.வி.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலரும், மாநாட்டுத் தலைவருமான டாக்டர் கே. செந்தில் கணேஷ் வழங்கினார். செயற்கை நுண்ணறிவுடன் இயற்பியல் தொழில்நுட்பங்கள் இணையும் சைபர்-பிசிக்கல் அமைப்புகள், ஸ்மார்ட் உற்பத்தி, மருத்துவம், போக்குவரத்து, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றார்.

சிஐஐ கோவை மண்டல துணைத்தலைவரும், ஆர்க் குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான மகாலிங்கம் ராமசாமி வரவேற்றார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசினார்.

40 ஆசிரியர்களுக்கு தொழில்துறை பயிற்சி

மாநாட்டில் முக்கிய நிகழ்வாக, சிஐஐ கோவை கல்விக்குழு சார்பில் செயல்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான தொழில்துறை நேரடி பயிற்சித் திட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், கோவை மற்றும் சுற்றுவட்டார கல்வி நிறுவன ஆசிரியர்களிடமிருந்து 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 40 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, 10 தொழில் நிறுவனங்களின் திட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

12 வாரங்கள் நடைபெற்ற பயிற்சியில், தொழிற்சாலை செயல்பாடுகள், தரநிலைகள், திட்டச் செயலாக்கம் மற்றும் நடைமுறைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நேரடி அனுபவம் வழங்கப்பட்டது. பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டதுடன், பயிற்சியில் பங்கேற்ற தொழில் நிறுவனங்களும் கவுரவிக்கப்பட்டன.

பல்வேறு துறை வல்லுநர்கள் பங்கேற்பு

தொடர்ந்து, ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மதன் ஏ. செந்தில், கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமை கல்வி அதிகாரி டாக்டர் என்.ஆர். அலமேலு, எச்.சி.எல். டெக் நிறுவனத்தின் முத்து சங்கர், ஈசாஃப் வங்கியின் ஜோஜோ கண்ணத், எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் சம்சுல் ஏக்ரம், கேப்ஜெமினி கோவை மையத் தலைவர் கார்த்திகேயன் ஆர். ஆகியோர் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்றனர்.

மேலும், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் வி. கோவைச்செல்வன், இந்தியன் ரெஜிஸ்டர் ஆப் ஷிப்பிங் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரபீந்திர சாஹ், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைமை புதுமை மற்றும் ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் குறிச்சி குமார், சீமென்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு தலைவர் கௌஸ்துப் குல்கர்னி உள்ளிட்டோர் நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புத் திறன்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மாநாட்டின் நன்றியுரையை, சிஐஐ கோவை கல்விக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஃபயர்பேர்ட் மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலருமான சுஜனா அபிராமி வழங்கினார்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தவும், எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கவும் இந்த மாநாடு முக்கிய தளமாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *