புதுச்சேரி மாநில திமுக துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் உட்பட அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. 1,300-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் ஆளும் அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்களின் உயிரோடு விளையாடும் அரசின் இந்த அலட்சியத்தை உடனடியாகக் கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு மற்றும் மருத்துவப் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.
பொதுமக்கள் யாரும் அச்சமடையாமல் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வீடுகளைச் சுற்றி மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் சுய மருத்துவம் செய்யாமல், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற்று தங்களைத் தற்காத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அனிபால் கென்னடி தெரிவித்துள்ளார்.