தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் பத்திர பதிவுத் துறை சார்பில் ரூ.3.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை புதிய அலுவலக கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா குத்து விளக்கேற்றி அலுவலகத்தை பார்வையிட்டார். பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட தலைநகரங்களில் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் வகையில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகங்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடத்தில் மாவட்ட பதிவாளர் நிர்வாகம் மற்றும் தணிக்கை அலுவலகம், எண் 1.இணை சார் பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட நான்கு அலுவலகங்கள் இக்கட்டிடத்தில் செயல்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், மதுரை துணைப் பதிவுத்துறைத் தலைவர் இரவீந்தர்நாத் மதுரை சரக உதவிப்பதிவுத்துறைத் தலைவர் என்.ராஜ்குமார் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம் மற்றும் தணிக்கை) விஜயசாந்தி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி தேனி-அல்லிநகரம் நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத் தலைவர் செல்வம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.