முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், அதில் அவர் கூறி இருப்பதாவது; விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறுவதற்கு திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் தொடர்ந்து உழைக்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் பணிகளை தொடருங்கள். ஆட்சியின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி கூட்டம். நாடாளுமன்ற தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர். நம் கழகத்தினர் களத்தில் கவனம் செலுத்திப் பணியாற்றும்போது, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம். மேலும், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு போலி வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. திமுக மீது அவதூறு பரப்பவும், திமுக ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களும் இனி வரும் தேர்தலில் அதிகரிக்கக்கூடும் என்பதால், நாம் அதனை உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, திருச்சியில் வரும் 26ம் தேதி திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கக்கூடிய நிலையில், தொண்டர்களுக்கு முதல் அமைச்சர் இந்த கடிதத்தினை எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *