பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம்,ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட வளாகத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வட்டார அளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வட்டார அளவிலான ஊக்குவிப்பு முகாம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி ஆ. லட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் முன்னோடி வங்கி மேலாளர்கள் லையோன்ல் பெனிடிக்ட், சங்கர் சுப்பிரமணியம் மற்றும் தாட்கோ மாவட்ட மேலாளர் திருமதி பரிமளம், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS), பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் (PMEGP), பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME), அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) , முதலீட்டு மானியம் , மின் மானியம் , வட்டி மானியம் , மின்னாக்கி மானியம், ஆகிய திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் தொழில் செய்ய விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் தொழில் தொடங்குமாறு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி ஆ.லட்சுமி கேட்டுக்கொண்டார். மேலும் குடிசைத் தொழில், கைவினைத் தொழில் புரிவோர்க்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முன்னதாக மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஜனனி வரவேற்புரை, கூட்ட நிறைவாக மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் விக்னேஷ் நன்றியுரை வழங்கினார்
இந்நிகழ்வில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.