கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வருகின்ற 23 மற்றும் 24ம் தேதிகளில் “உலகம் தேடும் தமிழ்- அறிவு மரபுகள்” என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், கலைகளின் ஆய்வு நிறுவனம், அரி ஃபவுண்டேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் இந்த கருத்தரங்கை நடத்துகின்றனர்.
இந்நிலையில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியானது இதுவரை தமிழில் வெளிப்படுத்தப்படாத அறிவு சார் நூல்கள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்துதல் மற்றும் அவற்றில் உள்ள நல்ல சிந்தனைகளை பாதுகாத்து நூலாக வெளியிடுதல் என்பதை கருப்பொருளாகக் கொண்டதாக தெரிவித்தனர்.
இந்தக் கருத்தரங்கில் 600 மாணவர்களும் 500 தமிழ் பேராசிரியர்களும் ஆர்வலர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் இத்தாலி இலங்கை ஆகிய நாடுகளை சார்ந்த தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இதில் பல்வேறு தமிழ் கட்டுரைகள் நூல்களும் வெளியிடப்படுவதாக தெரிவித்தனர்.
பேராசிரியர் கி.நாச்சிமுத்துவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி தமிழ் ஆய்வு தடங்கள் என்ற தலைப்பில் அவர் ஆய்வு செய்த துறைகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இந்த பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.