நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்.
நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதியை குறைக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, காங்கயத்தில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் பெரியாரின் பெண்கள் அமைப்புகளின் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் காங்கயம் நிர்வாகி கவி தலைமை வகித்தார். இதில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் வறுமையில் இருந்து மக்களை பாதுகாத்து, வாழ்வு கொடுத்த திட்டமாகும். இந்தத் திட்டத்தை முடக்கும் வகையில் 100% நிதியை வழங்க வேண்டிய ஒன்றிய அரசு, தற்போது 60%மட்டுமே வழங்கும் என அறிவித்துள்ளது.
மீதி 40% நிதியை மாநில அரசுகளே வழங்க வேண்டும் எனக் கூறி, மாநிலங்களின் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வேலை உறுதித் திட்ட நிதியான ரூ.4,104 கோடி நிலுவைத் தொகையை தமிழ்நாடு அரசுக்குத் தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே, நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முழு நிதியை வழங்குவதோடு, இந்த வேலைத் திட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்கிற பழைய பெயரையே மீண்டும் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியாரின் பெண்கள் அமைப்பின் நிர்வாகி காயத்ரி, திராவிடர் கழக நிர்வாகி மணிவேல், காங்கயம் தொகுதி காங்கிரஸ் செயலாளர் அசதுல்லா, புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் திருமூர்த்தி, கண்ணுசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.