மாணவர்கள் இடை நின்றல் என்ற நிலை ஏற்படாமல் ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வலங்கைமான் அருகே நடந்த சேர்க்கை முகாமில் கலெக்டர் சாருஸ்ரீ வலியுறுத்தினார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த இனாம் கிளியூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வரவேற்றார். திமுக ஒன்றிய குழு உறுப்பினர் வீ. அன்பரசன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சௌந்தர்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் மற்றும் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 15, உத்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6, நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 9, இனாம் கிளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 14, கோவிந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 மாணவிகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்து முகாமை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ பேசுகையில், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளியில் பயிலும் காலத்தில் மட்டுமல்லாது பட்டப் படிப்பு படிக்கும் காலங்களில் கூட மாணவிகளுக்கு உரிமைத்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மாணவர்கள் இடை நின்றல் என்ற நிலை ஏற்படாமல் இருக்க ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

முதல் வகுப்பில் சேர்ந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எழுது பொருள், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை திமுக ஒன்றிய குழு உறுப்பினர் வீ. அன்பரசன் வழங்கினார். நிகழ்ச்சியில் இனாம் கிளியூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசித்ரா, உத்தாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கோமதி, நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலா, ஆவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி சாந்தி, கோவிந்தகுடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா, தாசில்தார் ரஷ்யா பேகம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சுப்புலட்சுமி, சிவக்குமார் (கிராம ஊராட்சி) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *