தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட படுக்கபத்து ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: தேர்தல் முடிந்த இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடன் நம்முடைய முதலமைச்சர், எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவர். தங்கம் விலை ஒன்றிய அரசு தான் குறைக்க முடியும் நமது ஆட்சி அதற்காக நிச்சயமாக முயற்சி செய்யவும். தேர்தல் நேரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார், தமிழ்நாட்டில் ஒரு கோடி 15 லட்சம் சகோதிகரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
சில பேருக்கு விடுபட்டிருக்கலாம் ஆனால் தேர்தல் முடிந்த பிறகு விடுபட்டவர்களுக்கும், ஒரு முகாம் அமைத்து வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேஸ் சிலிண்டர் விலை ரூ. 500, பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் 65 ரூபாய் குறைந்தால் அனைத்து விலையும் குறையும்.
நாம் எப்படி மாதம் ரூ. 1000 தருகிறோமோ, அதுபோல் வசதி இல்லாத குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு 1 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் ஆட்சி வந்தவுடன் விவசாயக் கடன், கல்விக் கடன் இரண்டும் ரத்து செய்யப்படும். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.