தென்காசி, மே – 27
திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தொடர்புடைய மேலும் 4 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் உள்ள தனியார் உணவகம் முன்பு தீபக் ராஜா என்ற இளைஞர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
.இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்த அன்று வெளியான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி அறிவுறுத்தலின் படி காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சோரியா தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
உண்மை குற்றவாளிகள் கைதாகும் வரை தீபக் ராஜன் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது சமுதாய மக்கள் திட்ட வட்டமாக தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த படுகொலையில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் நவீன் மற்றும் லெஃப்ட் முருகன் உட்பட 4 பேர் திருச்சியில் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.அப்போது தப்பி ஓட முயன்ற நவீன், லெஃப்ட் முருகன் ஆகிய இருவரும் கீழே விழுந்ததில் கை,கால் முறிவு ஏற்பட்டது
இதையடுத்து 4 பேரையும் பிடித்து விசாரணைக்காக நெல்லை அழைத்து வந்தனர்.காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இது வரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலரை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தீபக் ராஜன் படுகொலை தொடர்பாக கூலிப்படை தலைவன் நாங்குநேரி அருகே உள்ள பூலம் ஊராட்சியை சேர்ந்த நவீன் உட்பட 8 பேர்களை நெல்லை மாநகர காவல் துறை கைது செய்தனர் இதையடுத்து வாலிபர் தீபக் ராஜன் உடலை தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் 27-05-2024 திங்கட்கிழமை காலை 9 மணியளவில் பெற்றுக் கொள்கின்றனர்.
பின்னர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அரசு சட்டக் கல்லூரி அருகே உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உடற்கூராய்வு மையத்திலிருந்து அவரது உடல் கேடிசி நகர்-சீனிவாசநகர் மேம்பாலம் ரெட்டியார் பட்டி புறவழிச்சாலை வழியாக மூன்றடைப்பு-நாங்குநேரி இடையே அவரது சொந்த ஊரான வாகைகுளத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் சமுதாய களப்போராளி தீபக் ராஜன் படுகொலை தொடர்பாக தமிழக காவல்துறை கூலிப்படையினரை கைது செய்துள்ளனர்
என்றால், அந்த கூலிப்படையினருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கொலையை செய்ய சொன்னது யார்? என்பதையும் கண்டுபிடித்து அவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று சமுதாய அரசியல் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்