எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் கடந்த 27 ஆம் தேதி சகோதர்கள் உட்பட மூன்று பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீஸார் கூண்டோடு மாற்றம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அதிரடி உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கச்சேரி ரோடு முக்கூட்டு வீதியில் கடந்த ஜூன் 27-ம் தேதி பட்டப்பகலில் நின்று கொண்டிருந்த அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மதன் (40), சீர்காழி உப்பனாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மதன் உறவினர் மணிகண்டன்( 32) ஆகிய இருவரையும் மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
மேலும் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி உப்பனாற்றில் தள்ளி விட்டுச் சென்றனர்.
இதைப்போல் மதன் சகோதரர் சுரேஷ் (33) என்பவரையும் மர்ம நபர்கள் இரும்பு பைபால் தாக்கினர். இந்த சம்பவம் சீர்காழி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்த நிலையில்இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக ராஜா(எ) பூரணச்சந்திரன், சீர்காழி கச்சேரி ரோட்டை சேர்ந்த விக்னேஷ், சீர்காழி பிடாரி கீழ வீதியைச் சேர்ந்த வினோத்குமார், ராதாநல்லூர் பெரிய தெருவைச் சேர்ந்த குற்றாலீசுவரன் ஆகிய 4 பேரை கடந்த 29 ம் தேதி கைது செய்தனர்.
மேலும இந்த சம்பவத்தில் சீர்காழி அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்த அருண்குமார், சீர்காழி ஈசானியத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார். ஆகிய இரண்டு பேரையும் எஸ் பி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீஸார் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சீர்காழி போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பட்டப் பகலில் சீர்காழி நகர் பகுதியில் மூன்று பேர் வெட்டப்பட்ட வழக்கில் பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக, சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மயிலாடுதுறை ஆயுதப்படைக்கும், சீர்காழி சப் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் குத்தாலம் காவல் நிலையத்திற்கும், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், காவலர் அகஸ்டின், தலைமை காவலர் குலோத்துங்கன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சதீஷ் குமார், ராஜாஜி ஆகியோர் மணல்மேடு காவல் நிலையத்திற்கும் பணி மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி மீனா உத்தரவிட்டுள்ளார். சீர்காழி காவல் நிலையத்தில் 7 போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்ட சம்பவம் காவலர்கள் இடையே அச்சத்தையும், பொதுமக்கள் இடையே பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.