விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை திமுக கூட்டணிக்கு அளித்த வாக்காளர்களுக்கு
நன்றி
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய அத்தொகுதி மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி மூன்றரை ஆண்டுக் கால திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கி இருக்கும் அங்கீகாரம்ஆகும்.
இந்த இடைத்தேர்தலில் பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டனர். தவறான பரப்புரைகளையும் அவதூறுகளையும் பேசி வந்தனர். அவற்றையெல்லாம் மக்கள் புறந்தள்ளி வரலாற்று வெற்றியை இந்தியா கூட்டணிக்கு வழங்கி இருக்கின்றனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றி இருப்பது ஒன்றிய அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் பறைசாற்றுகிறது. மீண்டும் மீண்டும் இந்தியா கூட்டணி வலுவடைந்து
வருவது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் விடயமாகும்.
விக்கிரவாண்டி வெற்றியைச் சாத்தியமாக்கி இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களுக்கும் களப்பணி ஆற்றிய இந்தியா கூட்டணியின் அத்துணை தோழமைக் கட்சியினருக்கும் என் டி ஏ கூட்டணியின் பொய் பரப்புரையைப் புறந்தள்ளி அமோக வெற்றியைப் பதிவு செய்த விக்கிரவாண்டி தொகுதியின் வாக்காளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.