தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்
மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்*

நாமக்கல்
தமிழகத்தில் இயக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தலைமை வகித்துப் பேசினார். சம்மேளன செயலாளர் ஆர்.ரவிக்குமார், பொருளாளர் எம்.ராமசாமி உள்பட மாநிலம் முழுவதும் இருந்து சம்மேளன நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செல்ல.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு மணல் குவாரிகளில் அனுமதிக்கட்ட அளவை விட அதிகளவில் மணல் அள்ளியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023ம் ஆண்டு செப்., மாதம் ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போது முதல் கடந்த 7 மாதங்களாக மணல் குவாரிகள் இயங்காமல் மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் வேலைவாய்ப்பை இழந்துளள்னர்.

இதனால் ஏற்பட்ட மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான பணிகளும் சரியாக நடைபெறவில்லை. இதனை பயன்படுத்தி எம். சாண்ட் உற்பத்தியாளர்கள் 2 ஆயிரத்திற்கு விற்பனை செய்த ஒரு யூனிட் எம்.சாண்ட்டை ரூ.4 ஆயிரம் வரை விலை உயர்த்தியுள்ளனர்.

அவையும் தரமற்றவையாக உள்ளது. மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட 24 அரசு மணல் குவாரிகள் மற்றும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதித்த 26 புதிய குவாரிகளையும் சேர்த்து திறக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மணல் குவாரிகளை திறக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் லாரிகளை ஒரு இடத்தில் நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம்.

இது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மணல் குவாரி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருவதற்கும், அரசு மணல் குவாரிகளை திறப்பதற்கும் சம்பந்தமே இல்லை. எனவே அரசு மணல் குவாரிகள் அனைத்தையும் திறக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *