கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டார்.

அரசு தலைமை மருத்துவமனையில் நுழைவு வாயில், புறநோயாளிகள் பிரிவு, அலுவலகப் பிரிவு, அவசர சிகிச்சைபிரிவு, புறகாவல் நிலையம், மகப்பேறு பிரிவு, செவிலியர்கள் பணி ஓய்வறை, மருத்துவர்கள் பணி அறைகள், செவிலியர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், ஆய்வு மேற்கொண்டார்.


இவ்ஆய்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது, அரசு தலைமை மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் ஒரே கட்டுப்பாட்டு அறையில் வைத்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும் பாதுகாப்பு கருதி கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கவும், தேவைக்கேற்ப புதிய கோபுர விளக்குகள் அமைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி நடைபெறுவதையும், வல்லத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட குமராட்சி மற்றும் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட வண்டுராயன்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது குறித்தும், மேலும் அப்பள்ளிகளில் கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு, இணை இயக்குனர் (மருத்துவ நலப் பணிகள்) மரு. ஹீரியன் ரவிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், செயற்பொறியாளர் (பொ.ப.து கட்டிடம்) பிரமிளா மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *