தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா
தென்காசியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி , எஸ் பி ஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை இணைந்து ஆசிரியர் தின விழா, உலக எழுத்தறிவு தின விழா, அறிவொளி இயக்கத் தொண்டர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தென்காசி செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் டாக்டர் புதிய பாஸ்கர் தலைமை தாங்கினார். வெற்றி விநாயகர் புரோ மோட்டர்ஸ் உரிமையாளர் இசக்கிமுத்து என்ற சூரிய புத்திரன் முன்னிலை வகித்தார். இலஞ்சி ஆர் பி பள்ளி ஆசிரியரும் அறிவியல் இயக்க மாவட்ட செயலருமான சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கல்வி வளர்ந்து வந்த பாதை குறித்து அறிமுக உரையாற்றினார். அறிவியல் இயக்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கற்பது கற்கண்டு என்ற தலைப்பில் சிற்றுரை வழங்கினார். பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் மாரியப்பன் அறிவொளி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவை குறித்து முனைவர் விஜயலட்சுமி எடுத்துக் கூறி பெருமை கொண்டார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி
பே.மதிவதனா கலந்து கொண்டு அறிவொளி தொண்டர்களுக்கு சிறந்த அறிவொளி தன்னார்வலர் விருது வழங்கி வாழ்த்தினார்.
எஸ்பிஐ லைஃப் மாவட்ட மேலாளர் விக்னேஷ்வரன் கல்லூரி பேராசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகையிலும் மாணவர் நலன், பள்ளி வளர்ச்சி, சமூக மேம்பாட்டிற்காக உழைத்தமையைப் பாராட்டி சிறந்த ஆசிரியர் விருது வழங்கி வாழ்த்தினார்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் மேலாளர் குரு பால் ராஜ் சிறந்த பள்ளி கல்லூரி தாளாளர்களுக்கு விருது வழங்கி வாழ்த்தினார். முதன்மைக் கல்வி அலுவலரின் உயர்நிலைப்பிரிவு நேர்முக உதவியாளர் தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் முதுநிலை மேலாளர் சுபாஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்இராமசுப்ரமணியன் அனைவருக்கும் பாராட்டுச் சான்று வழங்கி வாழ்த்தினார்
தென்காசி வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகன் ஐயப்பன் , சேக் ஒலி வாவா , செல்வின், முதல்வர் ராஜன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். செங்கோட்டை பணி நிறைவு வேளாண் அலுவலர் சேக்முகைதீன் தொகுத்து வழங்கினார்.
தலைமை ஆசிரியர் செல்வ சுகுனா ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பேசும்போது ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் போது புன்னகையுடன் பாடங்களை கற்பிக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் புரிந்து படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார் இதனால் மாணவர்களின் தேர்ச்சி திறன் அதிகரிக்க கூடும் எனவும் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட சமூக நல அலுவலர் பேசும் போது குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த முப்பெரும் விழாவில் விருதுகளை பெறுவதற்காக திரளான ஆசிரியர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் தங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்.