அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், அரியலூர் மாவட்ட கிராம குடிநீர் திட்டக்கோட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பங்கேற்று, மழைநீர் சேகரிப்போம், நிலத்தடி நீரை பாதுகாப்போம் என கோஷமிட்டபடி பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி பிரதான சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் பொதுமக்களுக்கு மழைநீரை சேகரிக்கும் முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி நிர்வாக பொறியாளர்கள் சுகுணாராஜ், வளவன், நிலத்தடி நீர் ஆய்வாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், முகேஷ்குமார் மற்றும் ஆய்வக பணியாளர்கள், காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர்.