டிசம்பர் 15-ல் கோயம்புத்தூர் மாரத்தானின் 12வது பதிப்பு,21,000 பேர் பங்கேற்க்க உள்ளனர்- டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை வெளியீட்ட காவல் ஆணையர்…

கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளைக்கு (சிசிஎஃப்) நிதி திரட்டும் வகையில், வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தானின் 12-வது பதிப்பு வரும் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 21,000-க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில் இன்று, பங்கேற்பாளர்களுக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் மாரத்தான் ஓடி முடிப்பவர்கள் பெறவிருக்கும் பதக்க வெளியீட்டு நிகழ்வு கோவை புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வாக்கரூ குழும இயக்குனர் ராஜேஷ் குரியன், ELGI நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ், கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (சிசிஎஃப்) நிர்வாக அறங்காவலர் பாலாஜி, கோயம்புத்தூர் மாரத்தான் ரேஸ் டைரக்டர் ரமேஷ் பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்று அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வெளியிட்டனர்.

டிசம்பர் 14 ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடிசியா அரங்கம்-B இல் மாரத்தான் எக்ஸ்போ ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் பதிவு செய்த பங்கேற்பாளர்கள் தங்களுக்கான டி-ஷர்ட் உள்ளிட்டவற்றை அங்கு பெற்றுக் கொள்ளவும், மற்ற பங்கேற்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், விளையாட்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் பொருட்களை விற்கும் ஸ்டால்களைப் பார்வையிடவும் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் மாரத்தான் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (சிசிஎஃப்) நிர்வாக அறங்காவலர் பாலாஜி கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த கோயம்புத்தூர் மாரத்தான் துவங்கப்பட்டதாகவும் இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் குறைவான அளவிலேயே ஆதரவு இருந்து வந்த நிலையில், தற்போது 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் அளவிற்கு சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளதாகவும் கூறினார். உறுதுணையாக இருக்கும் கோயம்புத்தூர் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *