திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை வன கிராமங்களில் குதிரை பொங்கலை மலைக்கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
திண்டுக்கல் அருகே பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

இந்த மலைக் கிராமங்களில் உள்ள வனப்பகுதியில் சாலைவசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, சௌசௌ, அவரை, காப்பி, ஏலக்காய், பழாப்பழம் போன்றவற்றை பயிர் செய்கின்றனர்.

இந்நிலையில், மலைப்பகுதியில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை ஊருக்குள் எடுத்து வர குதிரையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு குதிரைகளாவது வைத்திருப்பார்கள். இந்நிலையில், தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையடுத்து 15.1.2025 அன்று மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் சிறுமலை மலைப்பகுதியில் குதிரைகளை தெய்வமாக கருதி தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் குதிரைகளை குளிப்பாட்டி அதற்கு கலர் பொடிகளை கொண்டு உடல் முழுவதும் அலங்காரம் செய்து மாலை அணிவித்து சலங்கை கட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள்.

இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்த பொங்கலை குதிரைக்கு ஊட்டி விடுவார்கள். பின்னர் அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். இன்றைய தினம் குதிரைக்கு முழு ஓய்வு அளித்து அதை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள்.

தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் குதிரைகளை தெய்வமாக வழிபட்டு சிறுமலை மலைக்கிராம பொதுமக்கள் குதிரை பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *