வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து மதுராபுரியில் உள்ள சித்திரப்பட்டி குக்கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொங்கல் தினத்தன்று வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி கட்டி பொங்கல் திருநாளை கருப்பு பொங்கல் திருநாளாக அனுசரித்து ஆட்சேபனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மோகன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார், காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் சித்திரப்பட்டியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு,விவசாயம் பாதிப்பு, கால்நடைகள் வளர்ப்பு பாதிப்பு, பொருளாதார முன்னேற்றம் தடை, நூறுநாள் வேலை பாதிப்பு , பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் கிடைக்கும் பயன்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் சித்திரப்பட்டி குக்கிராமத்தை துறையூர் நகராட்சியுடன் இணைக்காமல் சித்திரப்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து மதுராபுரியை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று ஒருசாராரும் சிங்களாந்தபுரம் ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து அப்பகுதி மக்களும் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். இதில் வருவாய் ஆய்வாளர் அருள்பாரதி,வெங்கடேசபுரம் விஏஓ சுந்தர்ராஜ்,ஊராட்சி செயலர்கள் கண்ணதாசன்,சாமிவேலு மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.