மங்கலம்பேட்டை அருகே சாலையோரம் இருந்த மரம் விழுந்து மொப்பட்டில் சென்ற கீரை வியாபாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பாண்டூர் நெமிலி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (வயது 60). வியாபாரியான இவர் கீரை வியாபாரம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சென்று கீரைகளை கொடுத்து விட்டு மீண்டும் ஊருக்கு உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவருடைய மொப்பட்டை அவரே ஓட்டி சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 5:45 மணிக்கு பூவனூர் கனரா வங்கி முன்பு சாலை ஓரத்தில் இருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் குறுக்காக முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த விநாயகத்தின் மீது இந்த மரம் விழுந்தது.

இதில் விநாயகம் மரத்தின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மரத்தை வெட்டி அகற்றி பிரேதத்தை மீட்டனர்.

தகவல் கிடைத்து விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச் சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *