ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையின்
15-வது கோட்ட அலுவலகம் நம்பியூரில் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையின் 15-வது கோட்ட அலுவலகம் கோபியை அடுத்த நம்பியூரில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
பவானி அருகேயுள்ள ஆப்பக்கூடல், சக்தி நகரில் சக்தி சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கீழ் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு பயிரிட்டு பயனடைந்து வருகின்றனர்.
இந்த ஆலையின் கோட்ட அலுவலகங்கள் பவானி, அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 15-வது கோட்ட அலுவலகம் கோபியை அடுத்த நம்பியூரில் திறக்கப்பட்டது.
ஆலையின் துணைப் பொது மேலாளர் மோகன் குமார் ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். துணைப் பொது மேலாளர்கள் ராஜு, தேவராஜ், கண்ணன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நம்பியூர் மற்றும் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். இங்கு திறக்கப்பட்டுள்ள கோட்ட அலுவலகத்தின் சேவை மையம் மூலம் கரும்பு அபிவிருத்தி மற்றும் ஆலை மானியம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கரும்பு சாகுபடி செய்து அதிகமாக மகசூல் பெற்று பயனடைமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் மூலம் போதிய தண்ணீர் கிடைப்பதால் கரும்பு பயிரிட்டு ஆலைக்கு துணையாக இருப்போம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.