மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தலைமைச் செயலரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் புதுச்சேரியில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த கவுரவ விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பால சேவிக்காக்கள் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்வித்துறை முற்றுகை, மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். இந்நிலையில் அமைச்சரவையில் ஒராண்டு பணி நீட்டிப்பு செய்ய மட்டும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக தெரியவந்தது. இதனால் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் 2 நாள் தொடர் தர்ணா போராட்டத்தை அவர்கள் இன்று தொடங்கினர். போராட்டத்தை அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் தொடங்கி வைத்தார்.
கூட்டமைப்பு தலைவர் பாலகுமார், ஒருங்கிணைப்பு குழு பொற்செழியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசினார்.
அப்போது, பணிநிரந்தரம் கோரிய ஆசிரியர்களின் போராட்டம் உறுதியாக இருக்க வேண்டும். தேர்தலை காரணம் காட்டி ஆறுமாத காலத்திற்கு ஒப்பந்தத்தை அரசு நீட்டித்து ஆசிரியர்களையும் எதிர்க்கட்சிகளையும் ஏமாற்றும். அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு தலைமைச் செயலர் முட்டுக்கட்டை போடுவதால் தான் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்கிறது. இது நல்ல போக்கு அல்ல. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி, சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழி எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் அறிவிக்கும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுதிமொழிக் குழு கலைக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு பாடம் எடுத்து வரும் ஆசிரியர்கள் இளமையை இழந்து போராடுகிறார்கள். இந்த போராட்டத்தை புதுச்சேரியின் பொது போராட்டமாக கொண்டு செல்லாமல் முடிவுக்கு கொண்டு வந்து அவர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதிகார துஷ்பிரயோகத்தை தலைமைச் செயலர் தொடர்ந்து செய்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்.
இப்போராட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் சக்திவேல், வடிவேல் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். நாளையும் இந்த தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.