பல வருடங்களுக்கு முன்பு திரு. நடராஜன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சகவ்யம், இயற்கை விவசாயிகள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டு, தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதற்கு மேலும் மதிப்புக் கூட்டும் விதமாக, திரு. ஜகத்குரு என்பவர் ‘குரு பஞ்சகவ்யம்’ என்ற இயற்கை கரைசலை கண்டுபிடித்து, அதனை ஒரு சிலரிடம் பயன்படுத்த வழங்கி, அதன் விளைவுகள் மற்றும் பயன்களை காணொளி வடிவில் ஆவணமாக்கும் பணிகளை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 02.02.2026 அன்று வடலூரில் நடைபெற்ற திரு. ஜகத்குருவின் குரு பஞ்சகவ்யம் தயாரிப்பு பயிற்சி நிகழ்ச்சியில், பஜன்கோவா வேளாண் கல்லூரியின் இணைப் பேராசிரியரும், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நிரல் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில்,

வேளாண் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் பத்து பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியில் கலந்து கொண்ட பத்து மாணவர்களுக்கும் தலா ஒரு லிட்டர் ‘குரு பஞ்சகவ்யம்’ இலவசமாக வழங்கப்பட்டு, அதனை விவசாயிகள் மத்தியில் விரிவாக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக, பல்வேறு இடங்களில் ‘குரு பஞ்சகவ்யம்’ தொடர்பான களப் பரிசோதனைகள், டாக்டர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் மேற்பார்வையில், மாணவர்களின் முயற்சியில், விவசாயிகளின் பங்கேற்போடு நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, 06.02.2026 (நேற்று மாலை) காரைக்கால் மாவட்டம், சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு. ஆறுமுகம் அவர்களின், அய்யர் கொட்டப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ஏக்கர் நெல்வயலில் ‘குரு பஞ்சகவ்யம்’ தொடர்பான களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில், மாணவர்கள் தமிழ்மாறன், சேரன், தண்டபாணி மற்றும் ஸ்ரீராம்சாம் ஆகியோர், பேட்டரி இயக்கத் தெளிப்பான் மூலம் நெற்பயிர்களில் ‘குரு பஞ்சகவ்யத்தை’ தெளித்தனர்.

நடைமுறைப் பயிற்சியின் போது, விவசாயி திரு. ஆறுமுகம் அவர்களுக்கு குரு பஞ்சகவ்யத்தின் பயன்கள், தயாரிப்பு முறைகள் மற்றும் பயன்பாட்டு நுட்பங்கள் குறித்து விரிவான விளக்கமும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் திரு. முரளி, திரு. பழனி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக, மாணவர் ஸ்ரீதர் அனைவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார். இறுதியில், மாணவர் நந்தகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மாணவர் ஆஷிஷ் நிகழ்ச்சியை புகைப்படம் மற்றும் காணொளி மூலம் ஆவணமாக்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *